இலங்கையில் சர்வதேச சைட்டீஸ் மாநாடு

206 0

அழிவடையும் அச்சுருத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு எதிர்வரும் வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இம்மாநாடு 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன், 183 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சுற்று சூழல் அமைப்புகள், உலகளாவிய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நாலாயிரத்தை அண்மித்தோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சர்வதேச மட்டத்திலான சைட்டீஸ் சமவாயம் எனப்படும் அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வன விலங்குகளினதும் தாவரங்களினதும் சர்வதேச வணிகம் பற்றிய சமவாயம் 1973 ஆம் ஆண்டு வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வின் போதே கைச்சாத்திடப்பட்டு, 1975 முதல் அமுல்படுத்தப்பட்டதுடன், 1979 ஆம் ஆண்டில் இலங்கை இச்சமவாயத்தில் இணைந்து கொண்டது.

இலங்கையின் வனப்பிரதேசத்தை மேம்படுத்துவதற்கும், வன விலங்குகளையும் உயிர் பல்வகைமையை பாதுகாப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தி கொள்கைகளின் ஊடாக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பாரிய வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுவரும் தருணத்தில் இம்மாநாடு இலங்கையில் இடம்பெறுவது விசேட அம்சமாகும்.

மாநாட்டின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவின் தலைமையில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் அமரதுங்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோரும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment