நீதிச் சேவையுடன் ஏனைய துறைகளை ஒப்பிட முடியாது- மங்கள

205 0

நீதிபதிகள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு சமாந்தரமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மறுத்துள்ளார்.

நீதித்துறையுடன் தொடர்புபட்ட நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியன தனித்துவமான சேவைகளாகக் கருதி அவர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டன.

இந்தத் திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள் தனியார் துறையில் பணியாற்றினால் போதுமான வருமானத்தை ஈட்டுபவர்களாக இருப்பர். எனவே அவர்களை இந்த சேவையில் தொடரச் செய்வதை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் துறைகளை தனிப்பட்ட சேவைகளாகக் கருதி சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது.

இதனைப் பயன்படுத்தி ஏனைய அரச துறை அதிகாரிகள் சம்பள அதிகரிப்பைக் கோர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளங்கள் நீதிச்சேவை அதிகாரிகளுக்கு சமாந்தரமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

2006ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை சுட்டிக்காட்டி சம்பள உயர்வுகோரி வருகின்றனர். எனினும், ஜனவரி 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய பாராளுமன்றத்தின் இந்தப் பிரேரணை செல்லுபடியாகாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment