அரசியல் பிரவேச வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கா

305 0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அரசியலுக்கு வரவிருப்பதாக வெளியாகியுள்ள வதந்திகளை அவர் முற்றாக மறுத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகும் செய்திகளை குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாகவும், தன்னிடம் அவர் தொலைபேசி மூலம் இதனைத் தெரிவித்தார் என்றும் மூத்த விளையாட்டு ஊடகவியலாளர் ரஞ்சன் பரணவிதான டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் இம்ரான்கான் அங்கு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்கவுள்ள நிலையில், சங்கக்காரவுக்கும் அது நம்பிக்கையூட்டும் நிகழ்வாக அமைந்திருப்பதாகச் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்ற போது, பிரித்தானியாவுக்கான தூதுவராக சங்கக்காரவை நியமிக்க தற்போதைய அரசாங்கம் முன்வந்திருந்தது. எனினும் சங்கக்கார அந்தப் பதவியை ஏற்க மறுத்திருந்தார்.

இந்நிலையிலேயே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சங்கக்கார போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பில் அரசியல் மட்டங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குமார் சங்கக்கார தற்போது, இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் போட்டிகளின் வர்ணனையாளராகப் பணியாற்றுவதற்காக லண்டன் சென்றுள்ளார். எனினும், அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியாகும் தகவல்களுக்கு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் குமார் சங்கக்கார இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment