நல்லாட்சி அரசாங்கம் என்னை பழி வாங்கும் நோக்கில் செயற்படுகிறது- ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ

220 0

நல்லாட்சி அரசாங்கத்தில் இணையுமாறு தனக்கு கிடைத்த அழைப்பை மறுத்ததன் காரணமாக தன்னை பழி வாங்கும் நோக்கிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு அவருடைய வருடாந்த சொத்துக்கள் மற்றும் வருமானம் தொடர்பான விபரங்களை வழங்காத குற்றததிற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் நியமிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாக குற்றவாளி கூண்டில் இருந்த அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டே தெரிவித்துள்ளார்.

அந்த அழைப்பை மறுத்ததன் காரணமாக அன்று முதல் என்னை பழி வாங்க ஆரம்பித்துள்ளதாகவும் இதனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் பல்வேறு வழக்குகள் தனக்கு எதிராக தொடரப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு வருடாந்த சொத்துக்கள் மற்றும் வருமானம் தொடர்பான விபரங்களை முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதனால் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அடிப்படையற்றது என தன்னை விடுதலை செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment