மதச்சார்பற்ற அரசியலமைப்பை உருவாக்க சந்திரிக்கா அழைப்பு!

275 0

chandrika_bandaranayake-1சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்காக குமாரதுங்க மதச்சார்பற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தனது முயற்சியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற தேசிய நல்லிணக்கத்துக்கான செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், மதச்சார்ப்பற்ற அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி பற்றி, சிறீலங்கா பல நாடுகளிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்த அவர் பல நாடுகள் இவ்வாறு தமது பிரச்சனைகளைத் தீர்த்துள்ளன எனவும் தெரிவித்தார்.

தென்னமெரிக்கா கூட்டாட்சி அரசியல் மூலம் தனது நாட்டுப் பிரச்சனையைத் தீர்த்துள்ளது. நைஜீரியாவும் இதேபோலவே தனது நாட்டுப் பிரச்சனையைத் தீர்த்தது. இந்தியா 36 மொழிகளைப் பேசுகின்ற, பல மதங்களைப் பின்பற்றுகின்ற ஒரு நாடு. அங்கு ஒருபோதும் ஒற்றையாட்சி இருந்ததில்லை. இதைப்போல் பல நாடுகள் கடந்த காலத்திலிருந்து மாறியுள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நேரு, காந்தி போன்ற தலைவர்கள் கூட்டாட்சிக்கான வரைபொன்றை வரைந்தனர்.

இந்தியாவானது, அனைத்து இன குழுமங்களையும் பாதுகாக்கின்ற, அதிகாரப் பகிர்வைக்கொண்ட ஒரு நாடு என நான் உறுதியாக நம்புகின்றறேன். இதேபோல் நேபாளமும் முடியாட்சியை வீழ்த்தி கடுமையான பிரச்சனைகளைச் சந்தித்தது. தற்போது அது மதச்சார்பற்ற அரசியலமைப்பை நிறுவியதுடன் பல நாடுகளுக்கு உதவியும் வருகின்றது.

அத்துடன், அனைவருமே சமனானவர்கள் என புத்தர் சொல்கின்றார். அப்படியானால் நாம் ஏன் மற்றவர்களுக்கு சம உரிமையைக் கொடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம்? நாங்கள், புத்த சமயத்திற்கு முன்னுரிமையளிப்பதுடன் அனைத்து மதத்திற்கும் சம உரிமைகள் வழங்கும் ஒரு அரசியலமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றோம்.

எங்களால் முழுமையான மதச்சார்பற்ற அரசியலமைப்பை உருவாக்கமுடியாவிட்டாலும் அரை மதச்சார்ப்பற்ற அரசியலமைப்பையாவது உருவாக்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.