சேவையில் ஈடுபடாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

707 0

அனுமதிப்பத்திரம் இருந்தும், சேவையில் ஈடுபடாத தனியார் பஸ்களின், மார்க்க சாரதி மற்றும் நடத்துநர் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் எம்,ஏ.பி.ஹேமசந்திர அறிவித்துள்ளார்.

நாட்டின் தென்பகுதியில் இருந்து கொழும்புக்கு, சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் (சாதாரணம்) சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

வேலை நிறுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மாத்திரமே சேவையில ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், நேற்றைய தினம் (25) சேவையில் ஈடுபட்ட, போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஐந்து பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு சாரதிகளும் காயமடைந்துள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் கூறினார்.

அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் சேவையில் ஈடுபடுவது அவர்களது கடமை எனவும், ஒப்பந்தத்தை மீறிச் செயற்படும் உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும், நீதித்துறை வழங்கிய ஆலோசனைக்கு அமைய, எதிர்வரும் வியாழக்கிழமை வரை (28) அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரும் சேவையில் ஈடுபடாத பஸ்களின், மார்க்க, சாரதி மற்றும் நடத்துநர் அனுமதிப்பத்திரங்கள் ஆகியவற்றை இரத்துச் செய்யவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment