CSN நிறுவனத்தின் காணி குத்தகை உடன்படிக்கையை ரத்துச் செய்ய நடவடிக்கை

395 0

csn_tvபத்தரமுல்லை, டென்சில் கொப்பெகடுவ மாவத்தையில் அமைந்துள்ள சீஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனம் அமைந்துள்ள காணியின் குத்தகை உடன்படிக்கையை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த காணி, ராஜபக்ச ஞாபகார்த்த கல்வி மற்றும் கலாச்சார, சமூக சேவைகள் நிதியத்துக்காக பெறப்பட்ட போதும் அதில் வியாபாரம் நடத்திச் செல்லப்படுகிறது.

இது குத்தகை உடன்படிக்கையை மீறும் செயலாகும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்தக்காணி, 2006ஆம் ஆண்டில், நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து 30 வருட குத்தகை அடிப்படையில் வருடம் ஒன்றுக்கு 163 ஆயிரத்து 125 ரூபாவுக்கு பெறப்பட்டுள்ளது. எனினும் வருட குத்தகை பணம் அரசாங்கத்துக்கு செலுத்தப்படவில்லை.

குறித்த காணியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை.

இந்தநிலையிலேயே குறித்த காணி குத்தகை உடன்படிக்கையை ரத்துச் செய்வதற்கான சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.