டிக்கோயா நகரசபை தலைவரின் மனைவியின் தங்க நகையை அபகரித்துச் சென்ற நபர் கைது

304 0

ஹட்டன் மெண்டிஸ் மாவத்தை பகுதியில் கடந்த மே முதலாம் திகதி காலை 7 மணியளவில் தங்க நகை, தாலிக்கொடி ஆகியவற்றை அபகரித்துச் சென்ற நபர் ஒருவரை நேற்று மாலை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டிக்கோயா நகரசபை தலைவரின் மனைவியின் நகைகள் இவ்வாறு களவாடப்பட்டிருந்தது. நகரசபை தலைவரின் மனைவி கடைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த சந்தேக நபர் மாலையுடன் கூடிய தாலிக் கொடியினை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் ஐந்து பவுன் பெறுமதியுடைய நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், அதனை ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவுக்கு ஹட்டன் பிரதேசத்தில் உள்ள நகை கடை ஒன்றில் அடகு வைத்திருப்பதாகவும் அந்த பணத்தில் வீட்டு கூலி, செலுத்தியிருப்பதாகவும் ஏனைய பணத்தில் ஒரு கையடக்க தொலை பேசி கொள்வனவு செய்திருப்பதாகவும், 9000 ரூபா செலவழித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

களவாடப்பட்ட நகை மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட 116000 ரூபா பணம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ராமன் தினேஸ்குமார் வயது 27 எனவும், குறித்த சந்தேக நபரையும், மீட்கப்பட்ட பணம் மற்றும் நகைகளையும், இந்து ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment