இணக்கப்பாட்டு அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமாயின் நாட்டுக்காக பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறில்லாவிட்டால் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி இரவு 09.00 மணியாகும் போது இந்த இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விடயமும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினரால் மறுக்க முடியாதவை.
இதன் காரணத்தால் அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என்றும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரும் 02 ஆம் திகதி அறிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

