மஹசொன் அமித்தின் காரியாலயத்திலிருந்து 7 பெற்றோல் குண்டுகள் மீட்பு- பொலிஸ்

466 0

கண்டி தீவிரவாத நடவடிக்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசொன் அமைப்பின் பிரதாணி என்று கூறப்படும் விதானபதிரனயே அமித் ஜீவன் வீரசிங்க என்பவருடைய கண்டி, நத்தரங்பொத, குண்டசாலையிலுள்ள காரியாலயம் இன்று (13) சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்போது, அங்கிருந்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் வகையில் விநியோகிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த துண்டுப் பிரசுரம், பெனர் உட்பட பல்வேறு பொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. பெற்றோல் குண்டுகள் என சந்தேகிக்கப்படும் 7 போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று (13) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அறிவித்தார்.

இந்த வன்முறைகளுக்கு மேலதிகமாக அவரினால் ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொள்வதற்கு பயன்படுத்த தயார்படுத்தப்பட்டிருந்த மஹசொன் அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட மைக்ரோபோன், வங்கிக் கணக்கு புத்தகம், நிதி கிடைக்கப் பெற்ற பற்றுச் சீட்டுக்கள், வாகன அனுமதிப் பத்திரங்கள், இன வன்முறைக்கு ஈடுபடுத்துபவர்களுக்கு அணிவிக்கும் கைப் பட்டிகள், சி.பி.யு. கருவிகள் போன்ற பொருட்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.

அமித்திடமிருந்த கைத் தொலைபேசிக்கு வன்முறைச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் உள்வந்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசேட அனுபவமுள்ள அதிகாரிகள் அமர்த்தப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

கண்டி பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி முதல் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பேரில் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment