தியாதலாவையில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிகேடியர் ப்ரியங்கர பெர்னாண்டோ தொடர்பிலான சம்பவத்தில் நாட்டுமக்கள் தேவையற்ற வதந்திகளை பரப்பி பயத்தினை உண்டாக்கியிருப்பது தொடர்பில் தான் கவலையடைவதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பாதுகாப்பு படையின் 56வது படைப்பிரிவின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தியாதலாவையில் கைக்குண்டொன்று வெடித்திருப்பதாக தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் மேஜர் ஜெனரல் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் அடங்கிய குழு ஒன்றின் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பஸ் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் குறித்த சம்பவமானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் சேவையாற்றிய பிரிகேடியர் பிரயங்கர பெர்னாண்டோவின் பாதுகாப்பு கருதி அவர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

