உர மானியம் தொடர்பாக புதிய கொள்கை தயாரிக்கப்படும்

237 0

உர மானியம் தொடர்பாக புதியதொரு கொள்கையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னர் முதல் தடவையாக தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடிய சந்தர்ப்பத்திலேயே இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உர மானியம் வழங்குதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள இரண்டு பிரதான பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது பணமாக வழங்கப்படும் உர மானிய முறையில் திருத்தம் செய்யவும் எதிர்காலத்தில் உர தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கவும் இதன்போது முன்மொழியப்பட்டது.

விவசாயிகளின் உர தேவையை பூர்த்திசெய்வதுடன், விவசாய நிலங்கள் மாசடையாது பாதுகாக்கவும் பொருத்தமானதொரு செயற்திட்டத்தை தயாரிக்குமாறு தேசிய பொருளாதார சபைக்கும் விவசாய அமைச்சிற்கும் இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். மேலும் உரத் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அரசாங்கம் உரம் பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்களின் பெயர் விபரங்களை இற்றைப்படுத்தி பேண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கான சிறந்த முறையொன்றினை அறிமுகப்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கிளைபோசேட் தடை தொடர்பாக இதன்போது பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், கிளைபோசேட் தொடர்பாக தற்போதுள்ள சட்டதிட்டங்களில் திருத்தங்களை கொண்டுவந்து புதிய கொள்கை ஒன்றிணை அறிமுகப்படுத்துவதன் ஊடாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தேசிய பொருளாதார சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தேயிலை மற்றும் இறப்பர் பயிர்ச்செய்யப்படும் நிலங்களில் கிளைபோசேட் பாவனைக்கு அனுமதியளிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக ஆய்வுவொன்றினை மேற்கொண்டு புதிய கொள்கைகளை உருவாக்கவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

அதிகரித்துச்செல்லும் வாழ்க்கைச் செலவினை கட்டுப்படுத்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கான பிரதான காரணமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு இனங்காணப்பட்டதுடன், உணவுப் பொருட்களின் விலையை மேலும் கட்டுப்படுத்துவதற்கு தேவையான விடயங்களை கண்டறிந்து துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்கும் சிபாரிசு செய்யப்பட்டது. இதனிடையே அரிசி மற்றும் தேங்காய் விலைக் கட்டுப்பாடு தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது. தேசிய பொருளாதார சபை, நுகர்வோர் சேவைகள் அதிகாரசபை மத்திய வங்கி ஆகியன ஏனைய உரிய நிறுவனங்களுடன் இணைந்து துரிதமான ஆலோசனைகளை முன்வைப்பதற்கும் அதனூடாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைதலை கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டபோது பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நீர்ப்பாசனம், போக்குவரத்து மற்றும் மின்சக்தி உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யாது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் சிரமமாகுமென சுட்டிக்காட்டினார். அத்துடன் தகவல் தொழில்நுட்ப துறையின் அபிவிருத்திக்கான முதலீடுகளை அதிகரிக்க முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள அதிக இட நெருக்கடி காரணமாக பயணிகளுக்கான வளாகம் ஒன்றிணை நிர்மாணிக்க வேண்டுமெனவும் இதற்காக ஜப்பான் அரசின் உதவி (JICA) கிடைக்கப் பெற்றுள்ளபோதிலும் நிர்மாணப் பணிகளுக்கு ஏற்படும் அதிக செலவு காரணமாக தற்காலிக வளாகம் ஒன்றிணை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச, அரசாங்க ஒப்பந்தங்களையும் நிர்மாணப் பணிகளையும் மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் செலுத்துவதற்கான செயன்முறையொன்றுடன் கூடிய தேசிய கொள்கை அவசியமெனத் தெரிவித்தார். வெவ்வேறு அரச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகள் தொடர்பில் இத்தகைய பிரச்சினைகள் காணப்படுவதனால் நிர்மாணப்பணிகளில் தாமதங்கள் ஏற்படுகின்றன என தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் எந்தவொரு பிரதான உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனால் இரத்தினபுரி அதிவேக மார்க்கத்தின் நிர்மாணப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

வெளிநாட்டு வருமானங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய துறைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதனூடாக அந்நிய செலாவணியை அதிகளவு பெற்றுத்தரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஆடைக் கைத்தொழில், சுற்றுலா பயணத்துறை மற்றும் தேயிலை உற்பத்தி உள்ளிட்ட ஏனைய ஏற்றுமதி பயிர்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும் பொருளாதார கொள்கையின் அவசியம் குறித்து அமைச்சர் சரத் அமுனுகம சுட்டிக் காட்டினார்.

தேசிய பொருளாதார சபையினால் எதிர்வரும் சில வாரங்களுக்குள் மேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கையின் ஏனைய பொருளாதார விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால பொருளாதார கொள்கைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம, ரவுப் ஹக்கீம், ஜோன் செனவிரத்ன, சஜித் பிரேமதாச, துமிந்த திசாநாயக்க, பைசர் முஸ்தபா, மஹிந்த அமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் தேசிய பொருளாதார சபையின் உறுப்பினர்களான ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் மற்றும் அதன் பொருளாதார விசேட நிபுணர் பேராசிரியர் லலித் சமரக்கோன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Leave a comment