பாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு ஏற்ப குற்றம்சாட்டப்பட்டவர்களிடையே கடந்த அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பலர் இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக புதிய கட்சியொன்றை அமைத்து 2015க்கு பின்னோக்கிச் செல்வோம் என்று அவர்கள் குறிப்பிடுவது அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று ஊழல் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காகவேயாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
யார் எந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கொள்ள முயற்சித்த போதும் மக்கள் பணத்தை திருடிய அனைவருக்கும் உரிய தண்டனையை பெற்றுக்கொடுத்து அப்பணத்தை மீண்டும் அறவிடும் பொறுப்பை
நிறைவேற்றுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்களும் அரசாங்கத்தில் உள்ள சிலரும் மத்திய வங்கி பிணை முறி அறிக்கை தொடர்பாக அரசியல் மேடைகளில் கூக்குரலிட்ட போதும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஒரு சிலர் மட்டுமல்ல, 2008 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒரு பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

