, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது!

303 0

கோப் உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகள் சம்பந்தமான தகவல்களை, பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பித்தமை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலாகுமென, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

இந்நிலைமை தொடர்பாக, நேற்று (18) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த, ஐ.தே.க எம்.பியான பேராசிரியர் ஆஷு மாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று தெரிவித்ததோடு, இது தொடர்பாக சபாநாயகரைச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டார்.

“ஜனநாயகத்தில் திளைக்கும் நாடு என்ற வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறி, அவை கண்காணிக்கப்படக் கூடாது என்று நாம் கருதுகிறோம். இது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலென, சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “முன்னைய அரசாங்கத்தின் கீழ், தொலைபேசி உரையாடல்கள் எவ்வாறு கண்காணிக்கப்பட்டன என்பதை நாம் பார்த்தோம். ஏற்றுக்கொள்ளப்பட்ட தொலைபேசி வழக்கங்கள் என்று உள்ளன. தொலைபேசி அல்லது கணினித் தரவுகள், நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட பின்னர் தான் பெறப்பட முடியும். ஆனால், அவ்வாறான தகவல்கள், நீதிச் செயற்பாடுகள் முடிவடையும் வரை வெளியிடப்படக்கூடாது. நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான தொலைபேசித் தரவுகள், சபாநாயகரின் அனுமதியுடன் மாத்திரமே பெறப்பட முடியும்” என்று, ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், ஊடகச் சுதந்திரமும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையும் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சி.அலவத்துவல கருத்துத் தெரிவிக்கும் போது, “கோப் குழுவில் இருந்த அனைத்து அரசாங்க, எதிர்க்கட்சி உறுப்பினர்களும், முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். முன்னர், கோப் குழுவின் எந்தவோர் அறிக்கையும், சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவில்லை. ஆகவே அரசாங்கம், வெளிப்படையான முறையில் நடந்துகொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்துத் தெரிவிக்கையில், “கோப் குழுவைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அர்ஜுன் அலோஸியஸுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் உண்மையெனில், அவர்களை அரசாங்கம் பாதுகாக்கக்கூடாது. ஆனால், கோப் குழுவைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும், சட்டமா அதிபரிடம் அவ்வறிக்கை செல்வதற்கு ஏற்றுக் கொண்டனர்” என்று தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கக் காலத்தில், பிரதேச சபை உறுப்பினர் ஒருவரைக் கூடக் கைது செய்வதற்கு, பொலிஸாருக்கு அச்சம் காணப்பட்டது என்று தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம், இப்போதுதான் சிறப்பான அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

Leave a comment