இ.தொ.கா தலைவி விவகாரம்; இன்று வாக்குமூலமளிப்பு!

329 0

மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் செய்த முறைப்பாட்டுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செனன் கே.எம்.பிரிவு தலைவி, இன்று ஹட்டன் பொலிஸில் வாக்மூலமளிப்பார்” என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

இதற்கமைவாக, இ.தொ.காவின் செனன் கே.எம்.பிரிவு தலைவியை, இன்று காலை 9 மணிக்கு ஹட்டன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.

செனன் கே.எம்.தோட்டத்தில் கடந்த 16 ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தால் மூன்று குடியிருப்புகள் சேதமாகின.

இந்தத் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூரைத்தகரங்களை விநியோகிப்பதற்காக, மத்தய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், வெள்ளிக்கிழமை அங்குச் சென்றுள்ளார். இதன்போது, மாகாண சபை உறுப்பினரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், இ.தொ.காவின் செனன் கே.எம்.பிரிவு தலைவி நடந்துகொண்டதாக தெரியவருகிறது.

இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஹட்டன் பொலிஸார், செனன் கே.எம்.பிரிவுக்கு, சனிக்கிழமை காலை சென்றபோது அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் கவனத்துக்கும் இவ்விடயம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் உள்ளிட்டோர் விரைந்ததுடன், சிறிய முறைப்பாடொன்றுக்காக ஒருவரை கைதுசெய்ய முடியாது என வாதிட்டனர்.

அத்துடன், மல்லியப்பூ சந்தியில் குழுமிய ஆறுமுகன் தொண்டமான் எம்.பி மற்றும் இ.தொ.காவின் ஆதரவாளர்களால் அப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் பதற்றம் நீடித்தது.

இதனையடுத்து, ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து சுமூக நிலை ஏற்பட்டது.

Leave a comment