சைட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் – மைத்ரிபால சிறிசேன

286 0

சைட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தெஹியோவிட, திம்பிரிபல ஸ்ரீ அபிநவாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தங்க வேலியை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் இன்று (23) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சிறந்ததோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பிரிவினை தடையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளிலும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பிரிந்து நிற்காது அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு நாட்டை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன், கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும் நாட்டின் சுபீட்சத்திற்காகவும் கிராம சக்தி மக்கள் இயக்கம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த அபிவிருத்திப் பணிகளுடன் இணைந்து கிராமங்களையும் நாட்டையும் அபிவிருத்திசெய்வதற்கு பிரிவினைகளை மறந்து அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இன்று பிற்பகல் திம்பிரிபல அபிநவாராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி சமயக் கிரியைகளில் கலந்துகொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தங்கவேலியை திறந்துவைப்பதற்கான நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்துவைத்தார்.

சமுர்த்தி பெறுவோர், விசேட தேவையுடையவர்கள், உயர்கல்வி பெறும் மாணவர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு ஒருகோடி நாற்பது லட்சம் ரூபா இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டது.

தெஹியோவிட, திம்பிரிபல ஸ்ரீ அபிநவாராமாதிபதி உடகம தம்மதிலக நாயக தேரரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், அமரபுர மகா நிகாயவின் மகாநாயக தேரர் கொடுகொட தம்மாவாச மகாநாயக தேரரினால் விசேட அனுசாசன உரை நிகழ்த்தப்பட்டது.

மகாசங்கத்தினர், அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய, பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால, பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment