தமிழ் மக்களுக்கு உரித்துக்கள் வழங்கப்படுவதை எதிர்க்கும் சிங்களத் தலைவர்களுள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விதிவிலக்கானவர் அல்லர்.
அவரும் 2000ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன்வைத்த அரசமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தீ வைத்து எரித்தவர் தான். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தினால் கேள்வி, பதில் வடிவில் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘‘அரசமைப்பை மாற்றக்கூடாதென மகாநாயக்க தேரர்கள் கோரியிருக்கின்றனர் என்று செய்தி வந்தது. மகாநாயக்க தேரர் ஒருவர் வெளிநாட்டில் இருக்கும்போது இவ்வாறான தவறான செய்தியைப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?’’ இது கேள்வி.
முதலமைச்சரின் பதில், இன்று தமிழர்கள் படும் அவஸ்தைக்குப் போதிய உரித்துக்கள் அவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படவில்லை என்பதை விட தமிழர்களுக்கு எதுவும் வழங்கக்கூடாது என்று, சிங்களவர்களுள் ஒரு சாராரிடம் வெறியாக அமிழ்ந்திருக்கும், எண்ணமே காரணம்.
அந்த வெறிதான் பண்டா – செல்வநாயகம் உடன்பாட்டை கிழித்தெறியச் செய்தது. டட்லி – செல்வநாயகம் உடன்பாட்டை கைவிடச் செய்தது.
தமிழ் மக்களின் விடிவுக்கென ஒருவர் நடவடிக்கை எடுக்கும்போது மற்றொருவர் அதற்கு எதிர்ப்புக்காட்டி வந்தமைக்கு இந்த வெறியே காரணம்.
இதில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஒரு விதிவிலக்காக இருந்தார் என்று கூறமுடியாது. சந்திரிக்கா அம்மையார் 2000ஆம் ஆண்டில் அரசமைப்புத் திருத்தம் பற்றிப் பேசியபோது அந்தத் திருத்த ஏற்பாடுகளின் பிரதிகளை அவரின் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தினுள்ளேயே எரித்தனர்.
அந்த வெறியை அப்போது ரணில் விக்கிரமசிங்க தமது கட்சிக்கு சார்பாகப் பாவித்தார் என்றும் கூறலாம்.
தமிழர்களுக்கு எந்த விதச் சலுகையும் வழங்கி விடக்கூடாது என்பதில் சிங்களத் தலைவர்களுள் ஒரு முக்கியமான பிரிவினர் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளனர். பௌத்த சங்கத்தினர் அதற்கு விதிவிலக்கல்ல.
இவ்வாறான தமிழர் மீதான வெறுப்பின் அடியை அல்லது ஆரம்பத்தை நாம் அடையாளம் காண வேண்டுமானால் 1919ஆம் ஆண்டுக்குச் செல்ல வேண்டும்.
ஆங்கிலேயர்களிடம் சிங்களத் தரப்பினர் பிரதேச வாரியாக நாட்டைப் பிரித்து ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒருவரைத் தேர்தல் மூலம் நியமிக்க கோரினர்.
தமிழர் தரப்புக்கு அது நன்மை பயக்காது என்றும் இனரீதியாக அந்தந்த இனங்களைப் பாதுகாக்கும் வகையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
சிங்களவர்கள் தமது அதிகாரக் கையேற்புக்கு தமிழர் தரப்பின் யோசனை இடையூறாக இருக்கும் என்பதால், தமிழர் தரப்பின் சேர் பொன்னம்பலம் அருணாசலத்தை அணுகி அவர் ஊடாக தமிழ் தரப்பினரை தமது கோரிக்கைக்கு இணங்க வைத்தனர்.
பிரதேச வாரியான தேர்தல் முறையைத் தமிழர்களும் சிங்களவர்களும் ஒத்துக் கொண்ட உடனே அதன் அடிப்படையில் தேர்தல்களை நடத்தினார்கள் ஆங்கிலேயர்கள். சிங்களவர்கள் பெரும்பான்மையாக பிரதேச ரீதியாக நியமிக்கப்பட்டார்கள்.
அரசியல் அதிகாரம், நிர்வாக அதிகாரம் போன்றவை சிங்கள மக்கட் தலைவர்கள் வசம் சிக்குண்டன. சிங்கள ஆதிக்கம் அப்பொழுதிருந்தே ஆரம்பமாகியது. அதிகாரத்தைத் தம்வசம் எடுத்துக் கொண்ட சிங்கள மக்கட் தலைவர்கள் அதனைச் சிறிதும் தளர்த்த முன்வந்தாரில்லை.
மாறாக அரச அவை நிறுவப்பட்ட போது சிங்களவர் மட்டும் அமைச்சரவையை நியமித்தார்கள். இன்று அரசமைப்பில் மாற்றம் வேண்டாமென்று மகா நாயக்க தேரர்களோ வேறெந்த சிங்களத் தலைவர்களோ கோருகின்றார்கள் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.
1919ஆம் ஆண்டில் இருந்து தாம் பெற்றுக் கொண்ட அரசியல் அதிகாரத்தை எவ்வகையிலேனும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே அவர்களின் குறிக்கோள்.
அதிகாரம் பகிரப்பட்டால் இதுவரை சிங்கள மக்கட் தலைவர்கள் முழு நாட்டையும் ஆண்டு வந்த முறைமை இல்லாதொழிக்கப்படும்.
மீண்டும் தமிழ் மக்கள் தங்கள் தங்கள் இடங்களில் தலை நிமிர்ந்து வாழத் தலைப்பட்டுவிடுவார்கள் என்ற பயமே அவர்களின் இந்தக் கோரிக்கைக்குக் காரணம்.
சிங்கள அரசியல் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் மீது ஒரு பயம் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இரு தரப்பாரும் பரீட்சைகளில் ஒருமித்து ஆஜரானால் தமிழர்கள் எந்த துறையானால் என்ன அவற்றில் சிறப்பாகப் பரீட்சை எழுதி வெற்றி காண்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே தமிழர்களை எழும்ப விடக்கூடாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் கரவாக இடம்பிடித்திருந்தது.
அவ்வாறான கரவு எண்ணங்கள் கொண்ட பலர் இன்றும் சிங்கள மக்கட் தலைவர்களிடையே வாழ்கின்றார்கள். அவர்களின் சிந்தனையும் எதிர்பார்ப்புமே அரசமைப்பு மாற்றம் வேண்டாமென்பது.
இதன் அடிப்படை நோக்கம் தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கும் போது அதனை நிர்ணயிக்கும் பொறுப்பைத் தாம் தம் வசம் வைத்துக் கொண்டே கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே.
தேரர்களோ வேறெவறாயினும் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டாம் என்றால் அதற்கு நான் மேலே குறிப்பிட்டவையே காரணங்களாகும்.

