ஜப்பான் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய அதிபர் ஷின்சோ அபே ஆட்சியை தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வடகொரியா மீது உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வடகொரியாவுக்கு எதிரான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 44 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
பாராளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு வெறும் எட்டு சதவீதம் மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.
யாரை ஆதரிப்பது? என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என சுமார் 20 சதவீதம் பேர் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து, மக்கள் செல்வாக்கு உள்ளபோதே பாராளுமன்ற தேர்தலை நடத்தி மீண்டும் பிரதமராக தீர்மானித்துள்ள ஷின்சோ அபே கடந்த மாதம் 28-ம் திகதி பாராளுமன்றத்தை (பிரதிநிதிகள் சபை) கலைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 465 இடங்களில் சுமார் 1200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று இரவு தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் பல பகுதிகளில் லேன் சூறாவளி வீசி வரும் நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. இருப்பினும், வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சக்திவாய்ந்த மூன்றாவது பெரிய நாடாக அறியப்படும் ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் பதவி ஏற்பார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஷின்சோ அபே மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் பட்சத்தில் உலக்கப்போருக்கு பின்னர் நீண்ட காலம் ஜப்பான் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெயரை பெறுவார்.

