வத்தளை – ஹெகிவத்த சந்தியில் உள்ள, தனியார் நிறுவனம் ஒன்றில் நுழைந்து, அங்கு இருந்த பொருட்களை கொள்ளையடித்த 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டை, சீதுவ மற்றும் முனமல்தெனிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 3 சந்தேக நபர்களில், 2 ஆண்களும் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது அவர்கள் கொள்ளையடித்துள்ள 7 மடிக் கணணிகள், 4 வானொலிகள், 6 கைபேசிகள் உட்பட மின் உபகரணங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் நேற்றைய தினம் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கு, வத்தளை காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

