புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தார். அதை மீறும் வகையில் இராணுவத்தினர் எதேச்சதிகாரமாகச் செயற்படுகின்றனர்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டினார்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்ததாவது-:
முல்லைத்தீவு மாவட்டம் போரால் மிகப் பாதிக்கப்பட்ட மாவட்டம். புதுக்குடியிருப் பில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அரச தலைவருடன் பல தடவைகள் கலந்துரையாடினோம்.
கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி காணிகளை விடுவிப்பதற் கான வாக்குறுதியை வழங்கியிருந்தார்.
எனினும் இராணுவத்தினர் அவரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் செயற்படவில்லை. அங்குள்ள முகாம்களை அகற்றுவதில் இராணுவத்தினர் எந்தவித முனைப்பும் காட்டவில்லை. பாராமுகமாகவே இருக்கின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.
அதேவேளை, நாட்டில் நெடுஞ்சாலைகளை அமைப்பதற்குரிய பல்வேறு கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. திருகோண மலையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்துக்கான நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்குரிய கருத்திட்டம் முன்னர் காணப்பட்டது.
தற்போது அந்தக் கருத்திட்டம் கைவிடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. வடக்கின் பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றேன்.
புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுசுட்டான் வரையான சாலை அமைப்புப் பணிகள் நடைபெற்றிருந்தாலும் அதில் இரு கிலோமீற்றர்கள் வரையில் அமைக்கப்படாதுள்ளது. அது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்–என்றார்.

