கடந்த ஒரு மாதகாலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து 2லட்சம் பனம் விதைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. பனம் பழத்தையும் மக்கள் ஆர்வத்துடன் கொண்டுவந்து தருகின்றனர் என பனை அபிவிருத்திச் சபையின் விரிவாக்க முகாமையாளர் கோபால கிருஸ்ணன் தெரிவித்தார்.
பனை அபிவிருத்தி சபையினால் பனம்பழங்கள் மற்றும் பனம் விதைகள் கொள்வனவு செய்யப்படுகின்றன. தரமான பனம்பழம் 5 ரூபாவாகவும், பனம் விதை ஒரு ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பனை அபிவிருத்திச்சபையின் விரிவாக்கல் திட்ட முகாமையாளர் – கா.கோபாலகிருஸ்ணன் தெரிவித்ததாவது:
வலந்தலைச்சந்தி காரைநகரில் அமைந்துள்ள பனம்சார் பல்தொகுப்பு நிலையத்திலும், சிங்கை நகர் புலோலியில் அமைந்துள்ள பனைசார் உற்பத்தி நிலையத்திலும் பனம் விதைகள் மற்றும் பனம்பழங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
பனம்சார் உற்பத்திப் பொருள்கள் தற்போது நாடுமுழுவதும் பரவி வருகின்றன. பனம்சார் உற்பத்திப் பொருள்களால் பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.
இதனை ஊக்குவிக்கவே நாடு ழுழுவதும் இருந்து பனம் பழம், பனம்விதைகள் பனை அபிவிருத்திச் சபையால் கொள்வனவு செய்யப்படுகின்றன.
கடந்த செப்ெரம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கொள்வனவு செய்யப்படும் பனம்பழத்தின் மூலம் பனம்களி செய்யப்படவுள்ளது. பனம்விதை மூலம் பனம் பாத்தி போடப்படவுள்ளது.
அத்தோடு பொது அமைப்புக்களினூடாக பனம் விதைகளை வழங்கி நடுகையும் செய்யப்படவுள்ளது. பனைவளத்தைச் சார்ந்துள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
மக்கள் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பலர் முன்வந்து பனம்விதைகளை கொண்டுவந்து தருகின்றனர். இதுவரை 2லட்சம் பனம்விதைகள் தரப்பட்டுள்ளன. பனம் பழங்களையும் கொண்டுவந்து தருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்களிலேயே கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப டுவதால் சிறியதொகை பனம் பழத்தை கொண்டுவந்து தருவதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது 5 முதல் 10 வரையான பனம் பழங்கள் அவர்களிடம் இருப்பின் அதைத் தருவதில் சிரமப்படு கின்றனர் எனவே இதற்கு மாற்றுத் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
அதாவது மக்கள் ஒன்று சேர்ந்து 25 முதல் 30 வரையான பனம் பழங்களைச் சேகரித்து வைத்திருப்பார்களானால் நாங்கள் அங்கு நேரில் சென்று கொள்வனவு செய்யத் தீர்மானித்துள் ளோம்.
அடுத்தடுத்த வருடங்களில் பனம் விதை மற்றும் பனம் பழங்களை தருவதில் மக்கள் இன்னும் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கின்றோம் –என்றார்.

