சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடாது தீர்வு காணத் தயார் – லக்ஷ்மன் கிரியெல்ல

327 0

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியினை மூடாது, சைட்டம் மாணவர்களுக்கு அசாதாரணம் இடம்பெறாத வண்ணம் பிரச்சினைக்கு தீர்வு காணத்தயார் எனின் அதற்கு தாம் தயார் என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

சைட்டம் பிரச்சினையினை முன்வைத்து அதற்கு தீர்வு காண்பது தொடர்பான நிலை என்னவென்று பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 23 (2) பிரிவின் கீழ் கூட்டு எதிர் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சைட்டம் தொடர்பில் எழுந்திருக்கும் பிரச்சினை தொடர்பில் மருத்துவ பீட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் பல தடவைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவித்த அமைச்சர் அன்று வர்த்தமானியை முன்வைத்த நீங்கள் இன்று மகாநாயக்க தேரரிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும் இது பற்றிய வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளதால் தாம் அமைதியாக இருப்பதாக தெரிவித்த அவர் இது பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியினால் அறிவிக்கப்படவுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் மேலும் தெரிவித்தார்.

Leave a comment