வடக்கில் இடம்பெறுவது இராணுவ ஆட்சி

256 0

புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் பிரதமர் வழங்கிய வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் என வழங்கிய வாக்குறுதி தூக்கி எறியப்பட்டுள்ளதாகவும், பிலக்குடியிருப்பு விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிகளும் மீள பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் மற்றும் சுழற்சி முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நில மீட்பு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இவ்வாறான சம்பவங்களுடாக சிந்திக்கும்போது இந்த மண்ணில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகின்றதா? என எண்ண தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் ஆட்சியாளர்கள் எடுக்கும் எந்த முடிவுகளையும் இராணுவம் ஏற்கவில்லை எனவும் இராணுவ அதிகாரம் தான் அரசியலில் செயற்படுத்தபடுவதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

காணி அதிகாரம் என்பது 13 ஆவது திருத்தம் மூலம் வடமாகாண சபைக்குள்ளது என வெளியுலகிற்கு அரசாங்கம் தெரிவித்து வரும் நியைில் இந்த நடவடிக்கையின் மூலம் வடமாகாண சபையின் அதிகாரம் பூச்சியம் என்பது தெளிவுபடுத்தபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.