உயர்மட்ட பிரிவினை நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும்

219 0

அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் பிரிவினை நாட்டின் எதிர்கால செயற்பாட்டிற்கு தடையாக அமையுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய அரசியல் கலாச்சாரம் மற்றும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு அனைவரும் நாட்டின் நலன்கருதி திறந்த மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும் வெலிகமவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சொத்துக்கள் மற்றும் வளங்களின் பயன்பாட்டின் போது தமது நிறுவனத்தின் சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்தாக கருதி சில நிறுவனத் தலைவர்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனங்களுக்கிடையே காணப்படும் போட்டித்தன்மைக் காரணமாக நாட்டின் அபிவிருத்தி செயன்முறைக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படக் கூடாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அபிவிருத்தி செயற்பாடுகளின்போது அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்னர் நாம் மாறவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் அதேவேளை அரச சேவையிலும் தெளிவான மாற்றமொன்றினை ஏற்படுத்த அரச அதிகாரிகள் தயாராக வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகச் செயற்பாடுகளின்போது வர்த்தக நோக்கம் மற்றும் ஜனரஞ்சகத் தன்மையைக் கருத்திற்கொண்டு எதிர்மறையான செய்திகளை மாத்திரம் வெளியிடும் வகையில் செயற்படாது நாட்டைப்பற்றி சிந்தித்து செயற்படுவதற்கான பொறுப்பு ஊடகங்களைச் சார்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஊக்கப்படுத்துவதற்காக நாட்டின் உண்மையான அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் பொறுப்பு சகல ஊடகங்களுக்கும் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.