யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி!

737 0

thileepanயாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ள ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சியாகும்.

காந்தி தேசத்திற்கு காந்திய மொழியில் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டினை உணர்த்துவதற்காக தன்னையே உருக்கி பன்னிரு நாட்கள் ஒரு துளி நீரேனும் அருந்தாது உண்ணாநோன்பிருந்து வீரமரணமடைந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவானது பாரத தேசத்தின் தமிழினத்துரோகத்தின் சாட்சியாகவே காலமுள்ளவரை நினைவுகொள்ளப்படும்.

அந்த துரோக வரலாற்றை புதுப்பிக்கும் முயற்சியாகவே யாழ்.இந்தியத் துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின் முன்னேற்பாட்டில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்நிகழ்வு அமைந்துள்ளது.

உலக அகிம்சை வரலாற்றையே தனது தியாகத்தால் புரட்டிப்போட்டு புதிய வரலாறு படைத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளிற்கு அண்மித்த நாளில் அவரது நினைவிடத்திற்கு அண்மையிலேயே இந்நிகழ்வை நடத்துவதென்பது எமது தேசிய ஆன்மாவை அசைத்துப்பார்க்கும் முயற்சியாகும்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பேயாட்சியில் எமது விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுச் சான்றுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் எமது தேசிய ஆன்மாவின் அத்திவாரமாக விளங்கும் மாவீரர்கள் துயில்கொள்ளும் துயிலுமில்லங்கள் உழுதெறியப்பட்டும் உள்ள நிலையில் யாழ்.இந்தியத் துணைத்தூதரகமும் தேசியத்தை சிதைக்கும் முயற்சியில் தன்னையும் இதன் மூலம் இணைத்துக்கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினவிடங்களையும் நினவுச்சின்னங்களையும் அழித்தொழித்தது போதென்று எமது நினைவில் இருந்தும் அழித்துவிடலாமென்றே இவ்வாறான நிகழ்வுகள் எம்மிடையே வலிந்து திணிக்கப்படுகிறது. இவ்வாறான விசம முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

பாரத தேசத்தின் தமிழினத்துரோகத்தின் அழியா சாட்சியாக விளங்கிவரும் தியாக தீபம் திலீபன் அவர்கள் பிறந்த யாழ் மண்ணில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதென்பது நன்கு திட்டமிடப்பட்ட தேசியத்திற்கு எதிரான முயற்சியாகும். இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் எமது தாயக உறவுகள் இந்நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில் துணைத்தூதரகத்தை அமைத்து அதனை தளமாக்கொண்டு தமிழர் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இலங்கை துணைத்தூதரகம் தமிழீழ ஆதரவாளர்களின் போராட்ட மைய்யமாக்கப்பட்டு இறுதியில் துணைத்தூதரகத்தையே வெளியேற்ற வேண்டும் என்ற நிலையை எட்டியிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

சென்னையில் வெறுமனே கொடிபிடித்து கோசம் போடும் போராட்டத்துடன் வரையறுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டமானது யாழ் மண்ணிலும் அவ்வாறே இருந்துவிடுமென நினைத்துவிடாதீர்கள்!

யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் வெறுமனே தூதரக வேலைகளுடன் நிறுத்திக் கொள்வதன் மூலம் அதன் கண்ணியத்தினை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தமிழீழ மண் என்றும் துரோகங்களை நீண்ட நெடிய காலம் அனுமதித்ததில்லை என்ற வரலாற்றுப் பேருண்மையினை யாழ்.இந்தியத் துணைத்தூதரக விடயத்திலும் நிரூபனமாவது திண்ணம்.

தூதரக வேலைகள் தவிர்த்து எமது தேச விடுதலைப் போராட்டத்திற்கு ஊறுவிழைவிக்கும் செயற்பாடுகளில் யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் இனியும் ஈடுபடுமாக இருந்தால் இருந்த சுவடே தெரியாமல் துடைத்தழிக்கப்படுவது உறுதி.

ஆசிரியர்.
குறியீடு இணையம்.