சபரிமலை தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

765 0

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கோரும் வழக்கினை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுவரை உள்ள பெண்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, சபரிமலை தேவஸ்வஸ்தான் சபையின் சார்பில் பதில் மனுவொன்று தாக்கல் செய்யப்பபட்டது.

அந்த மனுவில், 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாற்றம் காரணமாக விரதத்தின் புனிதத்தை அந்த வயது பெண்களால் காக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் உள்ளதாலும் அந்த வயது பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று சமரிமலை தேவஸ்தானம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, அரசியல் சாசன அமர்வுக்கு அந்த வழக்கை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

Leave a comment