சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இந்நாட்டின் ஒரு தாய் மக்கள் – மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

215 0

மௌலவிமார்களே, இந்து மத குருக்களே, கிறிஸ்தவ மத குருமார்களே நீங்கள், நாம் இந்நாட்டில் இருக்கும் வரையில் நாட்டை துண்டாட இடமளிக்க முடியாது எனவும், உங்களுக்கு எங்களுக்கும் தற்பொழுது இந்த தார்மீகப் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது எனவும் பெப்பிலியான சுனேத்ரா மகா தேவி பிரிவெனாவின் விகாராதிபதியும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

இந்த நாட்டின் அதிகார ஆசை பிடித்த அரசியல்வாதிகளே நாட்டை துண்டாட போராட்டம் நடாத்துகின்றனர். இந்த இடத்திலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகளை உங்களுடைய நாடு என்ன என்று கேட்டால், ஒருமித்த குரலில் இலங்கை என்று கூறுவார்கள். இவர்களிடம் இந்த நாட்டை துண்டாட விருப்பமா? எனக் கேட்டால், நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போன்று இந்த நாட்டில் வாழ வேண்டும் என ஒரே குரலில் தெரிவிப்பார்கள்.

இரத்தத்தின் வகை வேறுபட்டாலும், அதனை மதத்தின் பேராலோ, இனத்தின் பெயராலே வேறுபடுத்திப் பார்க்க யாராலும் முடியாது. இதுதான் உண்மை. மனிதர்களிடையே பன்மைத்துவம் என்பது  ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். சிலரது மதம் வேறுபடலாம். பழக்கவழங்கங்கள் வேறுபடலாம். தேரர்களிடையேயும் வேறுபாடுகள் உள்ளன. அவர்களிடையே பல நிறங்களையுடைய ஆடைகள் அணிபவர்கள் உள்ளதாகவும் தேரர் கூறினார்.

பெப்பிலியான சுனேத்ரா மகா தேவி பிரிவெனா வளாகத்தில் நேற்று (10) இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாணவர்கள் 500 இற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றுகையிலேயே தேரர் இதனைக் குறிப்பிட்டார்.  ஒரே தாயின் பிள்ளைகள் எனும் தலைப்பின் கீழ் நடைபெறும் சந்திப்பாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a comment