அகதிகளை விரட்டி பௌத்த தர்மத்திற்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் – வஜிர அபேவர்தன

267 0

கடலில் தத்தளித்து கரை சேர்ந்தவர்களை கல்லால் அடித்து பௌத்த தர்மத்திற்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் என உள்நாட்லுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டி மலைநாட்டு கலைக்கலாச்சாரச்சங்க மண்டபத்தில் இடம் பெற்ற பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் கடமை புரியும் நிர்வாக உத்தியோகத்தர்களை வலுவூட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், மியன்மாரில் இருந்து இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் அகதிகளாகப் பலர் வந்துள்ளதாகவும் சர்வதேச சட்டங்களின் படி அவர்களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. தமது உயிரைக் காப்பாற்ற பயணம் செய்யும் போது நடுக் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டவர்கள். ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானங்களுக்கு அமைய அவர்களை வேறு ஒரு நாட்டிற்கு அனுப்பப்பட உள்ள நிலையில் இவ்வாறு கலகம் விளைவிப்பது வரவேற்கத்ததக்கதல்ல. இது சர்வதேச ரீதியாக இலங்கை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும். இவ்வாறான செயல்களை அனுமதிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

“பௌத்தர்களான நாம் எமது வீடுகளுக்கு பாம்பு அல்லது ஏதேனும் விஷ ஜந்து கூட வந்து விட்டால் அது எமக்கு ஒத்து வராத ஒன்று எனக் கருதும் போது அதற்குறிய இடத்திற்கு அதனை அனுப்பி விடுவோம். பாம்பு, யானை போன்றவற்றை காட்டில் கொண்டு போய் கைவிடுவோம். அதுதான் மனிதாபி மானம். அதேவிதம் கடலில் தத்தளித்தவர்கள் எந்த இனமானாலும் அவர்கள் உயிருக்குப் போராடும் போது அவர்களுக்கு அபயம் அளிப்பதே மரபு. அதனை மீறி நாம் நடந்து கொண்டால் எம்மை எத்தகைய ஒரு பிறவியாக சர்வதேசம் கருதும். எனவே இப்படியான விடயங்களுக்கு யாரும் ஆதரவு அளிக்க வேண்டாம்” என தாம் கேட்டுக்கொள்வதாக உள்நாட்லுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment