ரூ.2½ கோடி ஒதுக்காததால் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி

425 0

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியானது, உயர்த்தி அறிவிக்கப்பட்டபடி 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படாததால் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழக சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு ரூ.2 கோடியாக இருந்ததை ரூ.2½ கோடியாக உயர்த்தி கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு அரசாணையாக வெளிவரவில்லை.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி பணிகளை செய்வதற்கான ‘ஓர்க் ஆர்டர்’ கொடுக்கப்படுகிறது. ரூ.2 கோடிக்கான பணிகளை மேற்கொள்ள மட்டும் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிகிறது. நிதி நெருக்கடியால் அறிவிக்கப்பட்ட ரூ.2½ கோடியை வழங்க முடியவில்லை.

சென்னையை பொறுத்த வரையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெறுவதால் அந்த பணிக்கு ரூ.1 கோடி எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சியில் இருந்து ஒதுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதற்கு சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2½ கோடியாக அரசு உயர்த்தியது. ஆனால் இதுவரையில் அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. பழைய முறைப்படி ரூ.2 கோடி ஒதுக்குவதாகவும் அதில் ஒரு கோடி மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
மீதி நிதியை வைத்து தொகுதி வளர்ச்சி பணியை எப்படி செய்ய முடியும். எனவே அரசு அறிவித்த ரூ.2½ கோடி நிதியை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment