ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில், வைகோ மீது சிங்களவர்கள் சிலர் தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன் மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் இலங்கை துணைதூதரகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றுள்ளனர்.
ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவத்தில் இலங்கை அரசுக்கு இந்திய மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இந்தநிலையில், தடையை மீறி இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் என, இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன

