மன்னாரில் ஒன்றரை வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் (காணொளி)

552 0

மன்னார் சிலாபத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறுவனின் சடலத்தை இன்று மாலை தோண்டி எடுத்துள்ளனர்.

அத்துடன் சிறுவனின் தந்தையை சிலாபத்துறை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்துள்ளனர்.

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலபாத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள பெற்கேணி கிராமத்தில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றின் மகனான ஒன்றரை வயது மதிக்கத் தக்க சரூன் கேலம் என்ற சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் வீட்டில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த சிறுவனின் சடலத்தை பெற்றோர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லாது அன்றையதினம் மாலை பெற்கேணி முஸ்ஸீம் மையவாடியில் அடக்கம் செய்தனர்.

எனினும் குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் கொண்டவர்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சிலாபத்துறை பொலிஸார் குறித்த விடையத்தை மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, குறித்த சடலத்தை தோண்டி எடுக்க அனுமதியையும் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக இன்று மாலை குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இன்று மாலை 3 மணியளவில் பெற்கேணி கிராமத்திற்குச் சென்ற மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முதலில் உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்குச் சென்று விசாரனைகளை மேற்கொண்டார்.

இதன் போது விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் சென்று தடையங்களை பரிசோதனை செய்தனர்.

அதனைத்தொடர்ந்து பொற்கேணி முஸ்ஸீம் மையவாடிக்குச் சென்ற மன்னார் நீதவான், விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸார் முன்னிலையில் குறித்த சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டமைக்கு அமைவாக குறித்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும், பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.

இதேவேளை உயிரிழந்த குறித்த சிறுவனின் தந்தையை சிலாபத்துறை பொலிஸார் கைதுசெய்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment