வித்தியா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நபர் மீண்டும் விளக்கமறியலில்

2236 0

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெருமளவு கவனத்தை ஈர்த்திருந்த வித்யா படுகொலை வழக்கில் 7 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேம்சங்கர், மாணிக்கவாசகம் இளஞ்செழியன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதாய விளக்க மன்றால் இன்று இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 எதிரிகளும் குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தே தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை பேருந்தில் சந்தேகத்துக்குரியவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது காவல்துறையினருக்கு மேலதிகமாக, காவலதுறை விசேட படைப்பிரிவினரும் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, நீதாய விளக்க நீதிபதிகள் தமது தீர்ப்பு அறிக்கை வாசித்தனர்.

நீதிபதிகளின் தீர்ப்புக்கு அமைய வழக்கின் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம் மற்றும் 9 ஆம் எதிரிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலா 30 வருட ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்யாவின் குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வித்யாவை கடத்த திட்டம் தீட்டியமை, கடத்தியமை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை, படுகொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக நான்கு எதிரிகளுக்கு மரண தண்டனையும் 30 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார், 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன், 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன் ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அததுடன், 40 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிகப்பட்ட குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபா நட்டஈடும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த அபராதத் தொகையை செலுத்தத் தவறின் நான்குமாதச் சிறைத்தண்டனையும், நட்டஈட்டை செலுத்தத் தவறின் 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன், 8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன், 9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் சகல குற்றங்களுக்கும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்களுக்காக மரணதண்டனையும் 30 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

அவர்கள் 70 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபா அபராதமும் செலுத்த வேண்டும்.

குறித்த அபராதத் தொகையை செலுத்தத் தவறின், ஏழு மாதச் சிறைத்தண்டனையும், நட்டஈட்டை செலுத்தத் தவறின் 02 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

முதலில் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி சசிமகேந்திரன் தமது 332 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வாசித்தார்.

அதில் அவர், 1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகள் மீதான கூட்டு வன்புணர்வு, கொலை, கொலைச்சதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான அன்னலிங்கம் பிரேம்சங்கரும், அதே தீர்ப்பையை அளித்திருந்தார்.

மூன்றாவதாக, நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் தமது 345 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வாசித்தார்.

அவர் தமது தீர்ப்பில் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத முதலாவது, ஏழாவது எதிரிகளை விடுவிக்குமாறும் அவர் தீர்ப்பளித்துள்ளார்.

இதையடுத்து, குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேரையும் நோக்கி, தங்களுக்கு ஏன் மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து, அவர்களின் விளக்கங்கள் தனித்தனியாக கோரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 7 பேருக்கும் மரணதண்டனையும் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பாயம் ஒருமித்த தீர்ப்பை வழங்கியது.

ஜனாதிபதி தீர்மானிக்கும் நாளில், உயிர் பிரியும் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகளும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு பாதுகாப்பகாக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

குறித்த தீர்ப்பு வெளியிடப்பட்டதையடுத்து படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் தாய், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது

தமக்கு ஏற்பட்ட இதுபோன்றதொரு அவலநிலை வேறு எந்த தாய்க்கும் ஏற்படக் கூடாது என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இதேவேளை, வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 7வது சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னர் மேற்கொண்ட திருட்டு சம்பவமொன்று தொடர்பில் குறித்த சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பழனி ரூபசிங்கம் குகதாசன் என்ற சந்தேகநபர் புங்குடுத்தீவு பிரதேசத்தில் மேற்கொண்ட திருட்டு சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Leave a comment