கல்லுண்டாய் கழிவுகள் தொடர்பில் சரா எம்.பி துரித நடவடிக்கை

435 0

saravanapavan_mpகல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் துரித நடவக்கையை மேற்கொண்டுள்ளார்.

கல்லுண்டாய் வெளியில் பல காலமாகக் கொட்டப்பட்டுவரும் திண்மக் கழிவுகள் தீப்பற்றி கொண்டதால் ஏற்பட்டிருக்கும் பாரிய புகைமண்டலம் சுற்றுச் சூழலுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது என கல்லுண்டாயையும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இக் கழிவுப் புகையிலிருந்து வெளிவரும் இரசாயனத் தாக்கத்தைப் பொறுக்காத இப் பிரதேச வாசிகளின் விருந்தாளிகளாக வந்து தங்கிய வெளிநாட்டு உறவுகள்இ இந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கியிருக்கின்றனர். இதைப் போன்று அன்றாடம் தமது வாழ்வியலைப் பாதிக்கக்கூடிய நிகழ்வுகள் பல தொடர்வதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த மக்கள் இயக்கம் சுகாதார முறையற்ற கழிவுகள் கொட்டப்படும் பிரதே சமாக கல்லுண்டாய் வெளி மாறிவருவதாக நான்கு நாள் ஆாப்பாட்டத்தை நடத்திய பின் வடமாகாண சபை முதல்வருக்கு 17 02 2015 அன்று ஒரு கடிதத்தையும் எழுதியிருந்தனர்.

மேற்படி மக்கள் இயக்கத்திற்கு முதல்வர் எழுதிய பதில் கடிதத்தில், குறுகிய கால நடவடிக்கைகள் நிறைவுபடுத்தப்பட்டுப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மெற்கொள்ளப்படுமெனவும் அதற்கு ஆறு மாதத்திற்கு குறையாத காலம் தேவை என்பதையும் உங்கள் இயக்கத்திற்குத் தெரியப்படுத்தி வைக்கின்றேன்- என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் சரியான முறையில்கழிவு முகாமைப் படுத்தப்படுமென்ற நம்பிக்கையுடன் மேலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல் இருந்தனர்.

அத்துடன் வலி, தென்மேற்கு பிரதேசசபைத் தவிசாளருக்கு, யாழ். மாநகர சபை அப்போதைய ஆணையாளர் செ.பிரணவநாதன் 23.03.2015 அன்று எழுதிய கடிதத்தில், கல்லுண்டாய் வெளித் திண்மக் கழிவகற்றல் இடத்தினை நவீன முறையில் அபிவிருத்தி செய்தல் தொடர்பாக கருத்திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கல்லுண்டாய் வெளியில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் கழிவகற்றல் சம்பந்த ப்பட்ட விடயங்களில் இன்றுவரை எதுவித முன்னேற்றமும் காணாத மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ. சரவணபவன் அவர்களின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு வந்தனர்.

உடனடி நடவடிக்கையாகப் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் 18.08.2016 அன்று அந்த இடத்திற்கு திடீரென விஜயத்தை மேற்கொண்டதோடு மானிப்பாய் பிரதேச சபைச் செயலாளர், பிரதேச செயலர், பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மாநகர ஆணையாளரின் பிரதிநிதிகளாகிய மாநகர பொறியியலாளர்கள் மக்கள் இயக்கப் பிரதிநிதிகள் மற்றும் அந்த இடங்கள் சார்ந்த கிராம அதிகாரிகள் என எல்லோரையும் அந்த இடத்திற்கு அழைத்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். தீயானது திட்டமிட்டு வைக்கப்பட்டதா? அல்லது இயற்கையாக ஏற்பட்டதா? என்ற விடயத்தையும் அங்கு ஏற்பட்டிருக்கும் இரசாயன மாசுக்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இந்த அறிக்கைகள் கிடைக்குமிடத்து அது தொடர்பாக உடனடி நடவடிக்கையைத் தான் எடுப்பதாகவும் அது சார்ந்த திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து ஆவன செய்வேனெனவும் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பான அச்சம் தொடர்வதாகவும், அங்கு ஏற்பட்டிருக்கும் இரசாயனப்புகைக் கழிவால் நோய் ஏற்படலாமென்றும் மக்கள் பீதியிலுள்ளதாகவும் மக்கள் பிரதிநிதியொருவர் தெரிவிக்கின்றார்.