கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுங்கள்! – சம்பந்தனுக்கு சிவசக்தி ஆனந்தன் அவசர கடிதம்

313 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு, எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் ஈ.பி.ஆர்.எல்.எப் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சம்பந்தனுக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடித்த்தில் ,“நாடாளுமன்றக் குழு கூட்டம் தொடர்பான உங்களது அறிவித்தல் கடிதம் கிடைத்தது. அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாகவும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பு ஒன்று வரவிருக்கின்ற சூழலில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் 20ஆவது திருத்தம் மற்றும் வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை ஆகியவை கொள்கை முடிவுடன் தொடர்புபட்டிருப்பதால், நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கூடுவதற்கு முன்பாக, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அங்கத்துவக் கட்சிகளின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுப்பதே சிறப்பானதாக இருக்கும்.

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எட்டப்படுகின்ற முடிவுகளுக்கேற்ப, நாடாளுமன்ற குழுவைக் கூட்டி, அனைவரும் ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதே சரியானதாகவும் சிறந்த ஜனநாயக செயல்முறையாகவும் இருக்கும். ஆகவே, தாங்கள் விரைவாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி கோருகிறது. எமது கோரிக்கையை ஏற்று செயற்படுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

 

Leave a comment