காணாமல் போனோர் அலுவலகம் – இன்று முதல் 

238 0

காணாமல் போனோர் அலுவலகம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் கைச்சாத்துடன் இந்த வாரம் வெளியாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த அலுவலகத்தின் பணிகள் காணாமல் போனோரை அறிதலும் அதற்கான தீர்வை வழங்குவதுமாக அமையும் என்று தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் பணியகத்துக்கான தலைவர் உட்பட ஏழு அங்கத்தவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர்.

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த நியமனங்களை ஜனாதிபதி மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், பணியத்துக்கான நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, பிரிவுகளுக்கான ஆளணி நியமனங்கள் இடம்பெறும்.

இதையடுத்து, அலுவலகங்களை எந்தப் பகுதிகளில் நிறுவுவது என்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியலமைப்பு பேரவையே இதன் கட்டமைப்பை வழிநடத்திச் செல்லும் என காணாமல்போனோர் தொடர்பான பணியக சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதில் சர்வதேச பிரதிநிதிகள் எவரும் உள்வாங்கப்பட மாட்டார்கள் என தேசிய கொள்கைகள் மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

காணாமல்போனோரை தேடுவதற்கான பொறிமுறையை உருவாக்குதல், அவர்கள் எவ்வாறான சூழ்நிலையில் காணாமல்போனார்கள்,  அவர்கள் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றனர் என்பது தொடர்பில் ஆராய்தல்,  இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் குறைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பணியகம் இயங்கும்.

இதேவேளை, காணாமல்போனோரது உரிமைகளை பாதுகாத்தல் மற்றும்  தேவைப்பாடுகளில் கவனம் செலுத்துதல், அவர்களது இழப்புகளுக்கான பரிகாரங்களை இனம்காணல் என்பன இந்தச் சட்டத்தின் இரண்டாம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் பணியகமானது, தமது செயற்பாடுகளை நிறைவுசெய்வது  குறித்து வரைவுத் திட்டங்களை தயாரித்து கால அட்டவணையின் அடிப்படையில் செயற்படும் என தேசிய கொள்கைகள் மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி விளக்கமளித்துள்ளார்.

Leave a comment