யானைகளை விற்கும் பரிந்துரைக்கு எதிர்ப்பு

259 0

இலங்கையில் இருக்கின்ற யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யலாம் என்று பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 

அண்மையில் இரத்தினபுரி, பலான்கொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் பரணவிதான இலங்கையில் அதிகபட்சமாக 4 ஆயிரம் யானைகள் மட்டுமே இருக்கலாம் என்று கூறினார்.

ஆனால் தற்போது இலங்கையில் 6 ஆயிரம் யானைகள் காணப்படுவது மிக பெரிய அதிகரிப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனாலேயே, யானைகளின் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் பரணவிதான தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை யானை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்சிரி கருணாரத்ன இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருவதாக கூறியுள்ளார் என பிபிசி செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மனிதர்களின் நடவடிக்கை காரணமாக நாள்தோறும் பெரும் எண்ணிக்கையான யானைகள் இறந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், தற்போது பெரஹரா போன்ற பௌத்த வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தக்கூடிய 115 யானைகள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, யானைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பரணவிதானவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, நமது நாட்டின் யானைகளை விற்பனை செய்யவோ, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கவோ அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

சட்ட விரோதமாக காடுகளை அழிப்பது போன்ற மனிதர்களின் பல மோசமான நடவடிக்கைகளால், யானைகள் இறந்து வருவதாக தெரிவித்த அவர், இந்த நிலையில் யானைகளை விற்பனை செய்ய முடியாதென்றும் அவற்றை பாதுகாக்க தான் சிறப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment