20ஆம் திருத்தச் சட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையுடன் ஆதரவு 

592 8

20ஆம் திருத்தச் சட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையுடனான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்துக்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

இந்த நிலையில் சில திருத்தங்களை முன்வைத்து, அவற்றையும் உள்ளடக்கினால் 20ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்கு கீழ் உள்ள வடமாகாண சபையும், கிழக்கு மாகாண சபையும் நாளையதினம் 20ம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள திருத்தங்கள் உள்ளடக்கப்படும் பட்சத்தில், 20ஆம் திருத்தச் சட்டமூலத்துக்கு வடமாகாண சபை ஆதரவு தெரிவிக்கும் என்றும் சுமந்திரன் குறித்த ஊடகத்திடம் கூறியுள்ளார்.

குறித்த சீர்த்திருத்தங்களையும் 20ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்குவதற்கு அரசாங்கம் இணங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திருத்தங்களை இன்று நடைபெறவுள்ள விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் ஃபைசர் முஸ்தபா முன்வைப்பார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment