மருத்துவ கல்லூரியில் இடம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக மாணவி வழக்கு

5125 0

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ கல்லூரியில் சேர்க்கை கிடைக்காத தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனக்கு மருத்துவ கல்லூரியில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி திருமா மகள் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில், தமிழக அரசு கடைப்பிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்கி தகுதி அடிப்படையில் உரிய மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கு இந்த கல்வி ஆண்டு மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மாணவி திருமா மகள் கூறி உள்ளார்.

மேலும், நீட் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்று 1,138-வது இடத்தில் தேர்வு பெற்றுள்ள தான், மருத்துவ சேர்க்கைக்கான தகுதி பட்டியலில் 50 சதவீதத்துக்குள் வருவதாகவும், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டினால் தன்னுடைய வாய்ப்பு பறிபோனதாகவும் மனுவில் அந்த மாணவி கூறி இருக்கிறார்.

மாணவி திருமா மகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன் நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருகிற 11-ந் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

Leave a comment