எடப்பாடி பழனிசாமியை நீக்குவதில் உறுதியாக இருக்கிறோம்: தங்க தமிழ்செல்வன்

1381 0

“கவர்னர் எங்களை அழைத்து நிச்சயம் பேசுவார்”, என்றும் “எடப்பாடி பழனிசாமியை நீக்குவதில் உறுதியாக இருக்கிறோம்” என்றும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறினார்.

“கவர்னர் எங்களை அழைத்து நிச்சயம் பேசுவார்”, என்றும் “எடப்பாடி பழனிசாமியை நீக்குவதில் உறுதியாக இருக்கிறோம்” என்றும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறினார்.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் நேற்று வந்தார். அங்கு டி.டி.வி.தினகரனை சந்தித்த பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் பொதுக்குழு-செயற்குழு உள்பட அனைத்து முக்கிய கூட்டங்களை கூட்ட டி.டி.வி.தினகரனுக்கே முழு அதிகாரம் உண்டு.

எனவே எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஏமாற்று வேலை. இந்த கூட்டத்தை கூட்டுவதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு எங்கள் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தலைமை கழகத்தில் இருந்து எனக்கு போன் செய்து அவர்கள் அழைப்பு விடுக்கும்போது, “இதற்கு முன்பு கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்குமாறு எனக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை? இது நியாயமா?”, என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு, ‘சரி விடுங்கள். மன்னித்தும், மறந்தும் விடுங்கள். இனி அப்படி எதுவும் தவறாக நடக்காது. தயவுசெய்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்’, என்று அங்குள்ள நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

எங்களது கோரிக்கை ஒன்று தான். முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட வேண்டும். ஊழல் ஆசாமி ஒருவர் மக்கள் பணி நிறைந்த பதவியில் இருக்கக்கூடாது என்பது எங்கள் விருப்பம். அந்த நிலைப்பாட்டில் எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் உறுதியாக இருக்கிறோம்.

அந்த நிலைப்பாட்டை நிறைவேற்றுகிறோம் என்று உறுதி அளித்தால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்போம். அது நிறைவேறாத பட்சத்தில் நாங்கள் எந்த கூட்டத்திலும் பங்கேற்க மாட்டோம். எங்கள் தரப்பு நியாயங்களை தமிழக கவர்னரை சந்தித்து கூறியிருக்கிறோம். தற்போது அதுகுறித்து கவர்னர் பரிசீலித்து வருவதாக நம்புகிறோம். எப்படியும் இன்னும் 2 நாட்களில் கவர்னர் எங்களை அழைத்து இதுசம்பந்தமாக பேசுவார் என்று கருதுகிறோம்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலம் அதிகரித்து வருகிறது. புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்கள் பணியாற்றிவிட்டு திரும்பியுள்ளனர். தற்போது எங்கள் அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இது இன்னும் அதிகரிக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் செல்வாக்கு எங்கள் அணிக்கே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment