அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கிரிபத்கொட சந்தியில் முன்னெடுக்கப்படலிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிரிபத்கொட நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை, நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதால் தடையையும் மீறி ஆர்ப்பாட்டக்கார்கள் செயற்பட்டால் அவர்களை கைதுசெய்வதற்கும் அடக்குவதற்கும் ஆயிரக்கணக்கில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸார் பொல்லுகள் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்யும் வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
பிரேசிலுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு கண்டனம் வெளியிடும் வகையிலேயே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பிரேசிலுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராக பணியாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் உட்பட இரண்டு நாடுகளில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக முறையான விசாரணையொன்று முன்னெடுக்கப்படுமாகவிருந்தால் அச்சமயத்தில் சாட்சியமளிப்பதற்கு தான் தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்ததோடு கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து அமைச்சர் சரத் பொன்சேகா, ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க முனைகின்றார் என கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அவ்வாறான நிலையிலேயே அமைச்சர் பொன்சேகா அமைப்பாளராக உள்ள களனி தொகுதியில் கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, சிசிர ஜெயக்கொடி, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

