ஜகத் ஜெயசூரியவிற்கு எதிரான யுத்தக்குற்ற வழக்கு ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை – இலங்கை 

302 0

இலங்கையின் முன்னாள் இராணுவ ஜெனரல் ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக பிரேசில் நீதிமன்றத்தில் யுத்தக்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான ஆவணங்கள், இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று வெளிவிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜகத் ஜெயசூரிய பிரேசில், கொலம்பியா, பெரு, சிலி, ஆர்ஜன்டீனா மற்றும் சூரிநாம் ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராக செயற்படுகிறார்.

கடந்த 2 வருடங்களாக இந்த பதவியில் இருந்த அவர், நேற்றையதினம் பிரேசிலில் இருந்து வெளியேறியதாகவும், இன்று கொழும்பை வந்தடைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு நிறைவடைந்த இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட யுத்தக்குற்றங்களில் அவர் ஈடுபட்டதாக தெரிவித்து, தென்னமிரிக்காவின் மனித உரிமைகள் அமைப்புகளால் கடந்த திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஆர்ஜன்டீனா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளிலும் எதிர்வரும் தினங்களில் வழக்குத் தொடரவிருப்பதாக, சட்டத்தரணி கார்லோஸ் கெஸ்டரீனா பெர்ணாண்டெஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சூரினாம் அதிகாரிகள் தங்களது மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த வழக்குத் தாக்கலை அடுத்தே ஜகத் ஜெயசூரிய பிரேசிலில் இருந்து வெளியேறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இதனை மறுத்துள்ள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே, தமது இரண்டு வருட பதவிக் காலம் நிறைவடைந்த நிலையிலேயே அவர் நாடு திரும்பியதாகவும் அறிவித்துள்ளார்.

Leave a comment