சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி என 3 பேருக்கும் ஆதரவு என ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதமாக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. பேட்டி அளித்ததால் தினகரன் ஆதரவாளர்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் குழப்பம் அடைந்தனர்.
அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனிக்கு வந்திருந்தார். அவரை, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் நேற்று காலை சந்தித்தார். பின்னர் தினகரனுடன் அமர்ந்து நிருபர்களுக்கு ஏ.கே.போஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது ஆதரவு சசிகலாவுக்கு தான். ஓ.பன்னீர்செல்வத்தை எனக்கு பிடிக்காது. தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது எங்களுக்கு மன வருத்தம். தற்போதும் அவர் தான் துணை பொதுச்செயலாளராக இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சர் ஆக்கியது சசிகலா தான். கட்சிக்கு தினகரன், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என சசிகலா கூறினார். எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து சொல்வோம். கேட்கவில்லை என்றால் மாறி விடுவோம். இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவாக வர தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அங்கிருந்து வெளியே வந்த ஏ.கே.போஸ் மீண்டும் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது, ‘தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தாலும், எடப்பாடி பழனிசாமி அணியில் தான் இருக்கிறேன். நான் பொதுவானவன்’ என்றார்.
மதுரை வந்த ஏ.கே.போஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேனியில் தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எடப்பாடி பழனிசாமி நல்ல முதல்-அமைச்சர். சசிகலாவை சந்தித்த பின்பு எந்த அணியில் சேர்வது என்பதை முடிவு செய்வேன்.
மேலூரில் தினகரன் கலந்து கொண்ட கூட்டத்தின்போது யாரும் என்னை கடத்தவில்லை. தினகரன் குற்றச்சாட்டை மறுக்கிறேன். உடல்நிலை சரியில்லாததால் தான் தினகரன் கொடுத்த பதவியை ஏற்கவில்லை. நான் எப்போதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினகரனை சந்தித்த பின்னர் தேனியிலும், மதுரையிலும் ஏ.கே.போஸ், நிருபர்களையும், கட்சியினரையும் குழப்பும் வகையில் பேட்டி அளித்தார். அவர் ஆதரவு கொடுத்தாரா? என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தினகரன் ஆதரவாளர்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் குழப்பம் அடைந்தனர்.

