எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏன் எங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை: தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

334 0

எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏன் தங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை? என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர்.
இன்றைய கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும், நிர்வாகிகளையும் டி.டி.வி.தினகரன் தன் பக்கம் இழுத்து வரும் நிலையில், அதை தடுப்பதற்கான முயற்சியும், ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏன் எங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை? என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆளுநர் தங்களை அழைக்க மறுக்கும் பட்சத்தில் குடியரசு தலைவரை சந்திப்போம் என்று அவர் கூறினார்.
இதனிடையே, ஆட்சியை கவிழ்க்கும் எண்ணமில்லை, கட்சியை காப்பாற்றுவதே நோக்கம் என்று டிடிவி.தினகரன் தெரிவித்து இருந்தார்.

Leave a comment