நாட்டில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமளிப்போமானால் அது மீண்டும் பயங்கரவாதம் உருவாவதற்கு வழியமைக்கும் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இன்று காலை வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு கூறினார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னயில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று வடமராட்சி கலிகை முருகன் ஆலயத்தில் பொலிஸார், இராணுவம், பொது மக்களுக்கு இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னான்டோ, யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி
மேஜர் ஜெனரல் தர்ஷன கெட்டியாராட்சி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ, காங்கேசந்துறை பொலிஸ் பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்டசகர் மாசிங்க, மற்றும் நெல்லியடி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
குறித்த மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னான்டோ….
‘வடமராட்சி ஆறாம் கட்டை சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியை சிறையில் அடைத்துள்ளோம்.
அதேபோல் வன்முறையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது எமது கடமை.
சூட்டு சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 100இற்கும் மேற்பட்ட துன்னாலை பகுதி இளைஞர்களை கைது செய்ய வேண்டியுள்ளது. ஆனால் 36 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். உங்கள் பகுதி இளைஞர்கள் தான் வன்முறை சம்பவத்தோடு தொடர்புபட்டுள்ளனர். எனவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை நீங்களாகவே கொண்டுவந்து நிதமன்றிலோ அல்லது பொலிஸ் நிலையத்திலோ ஒப்படையுங்கள். இல்லையேல் நாங்கள் எமது கடமையை செய்யவேண்டிவரும்.
இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை வடக்கில் எந்தவொரு மக்களும் விரும்பவில்லை. இவ்வாறான சம்பங்களை நிறுத்துமாறு எமக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.
இவ்வாறான சம்பவங்களை தொடர்ச்சியாக அனுமதிப்போமானால் அது மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவாவதற்கு வழியமைக்கும்.”
என தெரிவித்துள்ளார்.
இங்கு கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன கெட்டியாராட்சி…,
‘நாங்கள் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எமக்கு உங்கள் மீது எந்தவொரு கோபமும் கிடையாது. ஆனால் ஒரு குற்றச்செயல் இடம்பெறுமிடத்து அந்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டியது பொலிஸாரினதும், படையினரதும் கடமையாகும். அதனை தான் இங்கே பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த முப்பது வருடமாக நாங்கள் மிகவும் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருந்தோம். எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் அனைத்தின மக்களும் சாந்தியும் சமாதானமுமாக வாழ வேண்டும் என்பதே எமது இலக்கு. அதற்காக தொடர்ந்து பயணிப்போம்.” என தெரிவித்தார்.

