சுண்ணாகம் இளைஞர் மரணம் – கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீண்டும் விளக்கமறியலில்

266 0

சுண்ணாகம் காவற்துறையால் கைது செய்யப்பட்ட போது நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுண்ணாகம் காவல்துறையில் சேவை புரிந்து வந்த காவற்துறை உத்தியோகஸ்தர்கள் 6 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அடுத்த மாதம் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொள்ளை சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்த ஸ்கந்தராஜா சுமனன் என்ற நபர், உயிரிழந்தமை தொடர்பில் குறித்த காவற்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த சந்தேக நபரை கைது செய்து சித்திரவதை செய்தமை தொடர்பில் இதற்கு முன்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்துள்ள நிலையில், குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் சித்திரவதைக்கு உள்ளான நபரின் சடலம் பின்னர் கிளிநொச்சியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்களம், சுண்ணாகம் காவல்துறையின் அப்போது இருந்த பொறுப்பதிகாரி உள்ளிட்ட 8 பேரை கைது செய்திருந்தது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த இந்த வழக்கின் இடையே இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தரப்பினரில் சுண்ணாகம் காவற்துறையின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேர் அடங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment