யாழ்ப்பாணம் மாநகரசபையில் உள்ள 140 வாகனங்களில் தற்போது 83 வாகனங்களே இயங்கு நிலையில் உள்ளதோடு மேலும் 57 வாகனங்கள் இயங்காத நிலையில் காணப்படுவதாக மாநகர சபையின் தகவல் உத்தியோகத்தர் தெரிவித்தார்.இது தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழான கேள்வி ஒன்றிற்கு வழங்கிய பதிலின் மூலமே மேற்படி தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம் மாநகரசபையில் உள்ள 140 வாகனங்களில் தற்போது 83 வாகனங்களே இயங்கு நிலையில் உள்ளதோடு மேலும் 57 வாகனங்கள் இயங்காத நிலையில் காணப்படுகின்றது. அதாவது யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதிவில் தற்போது சகலவகைகளிலும் மொத்தமாக 140 வாகனங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் 140 வாகனங்களில் இன்றைய நிலையில் 83 வாகனங்கள் மட்டுமே தொழில்படுகின்றது. ஏனைய 57 வாகனங்களும் இயங்கா நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த 140 வாகனங்களில் 37 இழுவைப் பெட்டிகளும் உள்ளடக்கம்.
அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 57 வாகனங்களில் 10 வாகனங்கள் திருத்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதேபோன்று பாரிய திருத்தம் செய்ய வேண்டும் என இனம் காணப்பட்ட 26 வாகனங்கள் திருத்தம் செய்வதற்காக கூறுவிலை கோர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஏலத்தில் விற்பனை செய்யும் முடிவு எடுக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக 5 வாகனங்கள் உள்ளன. அதேபோன்று விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உடமை மாற்றம் செய்யக் காத்திருக்கும் வாகனங்களாக 8 வாகனங்கள் உள்ளது.
இவ்வாறு காணப்படும் திருத்தம் செய்ய வேண்டிய 57 வாகனங்களில் 26 வாகனங்கள் உதிரிப்பாகம் இன்மையாக உள்ளதோடு அறவே திருத்த முடியாது என இனம் காணப்பட்ட 21 வாகனங்களும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேநேரம் மாநாகர சபையின் ஒட்டு மொத்த 140 வாகனங்களில் 45 உழவு இயந்திரங்கள் உள்ளபோதிலும் இவற்றில் 17 உழவு இயந்திரங்கள் மட்டுமே இயங்கும் நிலையில் 28 உழவு இயந்திரம் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. 7 பேரூந்துகளில் 6 பேரூந்துகள் இயங்குவதோடு 4 பிக்கப் , 6 நீர்த்தாங்கி ,உள்ளிட்ட வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

