வெற்று வாக்குறுதிகள் மூலம் தீர்வின்றித் தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

440 0

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை உள்ளூர்-சர்வதேச தினங்கள் வெறுமனே சம்பிரதாயமாகவே கடந்து செல்கின்றன என்பதன் அண்மித்த சாட்சியாக கடந்து கொண்டிருக்கின்றது சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட்-30 கடந்து செல்கையில் இனவழிப்பு யுத்தத்தின் பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் கதியென்ன என்பதையாவது அறிவிக்க வலியுறுத்தி அவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் அறவழியிலான போராட்டங்கள் முடிவின்றித் தொடர்ந்து வருகின்றன.

சுதந்திர இலங்கையின் வரலாற்றின் பக்கமெங்கிலும் சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருவதன் சுவடுகள் ஆழமாகப் பதிந்துள்ளது. சிறிலங்கா முப்படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயமும் அந்த இலக்கணத்தை மீறாது தன்போக்கில் கடந்து செல்வதை அனைத்துலக சபைகளும், அமைப்புகளும், மா மன்றங்களும் வேடிக்கை பார்த்துவருவது நீதியை வேண்டி நிற்கும் தமிழர்களாகிய எமக்கு பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்துகிறது.

இனவழிப்பு யுத்தத்தின் ஆரம்பம் முதல் தமிழர்கள் காணாமலாக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா..? இல்லையா..? என்பதை அறிந்துகொள்வதற்கே அன்று முதல் அவர்களின் உறவுகள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக அனைத்துலகத்தாலும் அடிபணிவு அரசியல் செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும் முள்ளந்தண்டற்ற சில புலம்பெயர் செயற்பாட்டாளர்களாலும் முன்நிலைப்படுத்தப்பட்டு வரும் நல்லாட்சி(?)யிலும் தமிழர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் என்பதை இடித்துரைப்பதாக தீர்வின்றித் தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் அமைந்துள்ளது.

அவ்வப்போது ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கும் உபாயமாக வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அவர்களாகவே காற்றில் பறக்கவிடுவதும் சிறிலங்க அரசுகளின் வழக்கமாகிவிட்டது. அந்த வரலாற்றின் நீட்சியாகவே காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக ஆராய்வதற்கு அமைக்கப்படவிருக்கும் அலுவலகம் தொடர்பான அறிவிப்பும் அமைகின்றது.

சிறிலங்கா இராணுவத்திடம் நேரடியாக கையளிப்பு செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும், அவர்களுக்கு என்ன ஆனது என்பதையாவது அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆறு மாதங்களாக தாயகத்தில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயத்தில் தீர்வு அல்லது மரணம் என்ற உறுதியுடன் வீதியோரங்களை வாழ்விடமாக்கி காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் இருநூறு நாட்களை அண்மித்து வரும் வேளையில் சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினமும் கடந்து செல்கின்றது.

இத்தருணத்திலாவது சர்வதேச நாடுகள் மனிதாபிமானத்துடன் தலையிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களை வலியுறுத்துகின்றது.

‘தமிழரின் தாகம் தமிழீத் தாயகம்’

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

Leave a comment