அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள்(காணொளி)

370 0

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள், வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு, இன்று வழக்கு தவணைக்காக அழைத்துவரப்பட்டனர்.
2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்காடு வக்டர் முதலாம் முகாமில் வைத்து, 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவத்தினருக்கு மரணத்தினை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, 3 அரசியல் கைதிகளும் இன்று காலை 9.00 மணிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் அவர்களது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2009 ஆம் ஆண்ட ஜனவரி மாத காலப்பகுதியில் வவனியா மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் வைத்து, 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவ வீரர்களுக்கு மரணத்தினை விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் 2013 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 25 ஆம் திகதி மதியரசன் சுலக்சன் மற்றும் கணேசன் தர்சனுக்கும், 2017 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 12 ஆம் திகதி முதலாம் எதிரியான இராசதுரை திருவருளினையும் இவ் வழக்கில் இணைத்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் இவ் வழக்கு விசாரணையானது வவுனியா மேல் நீதிமன்றத்தில் குறித்த திகதி நிமிக்கப்பட்டிருந்த போதிலும், சட்டமா அதிபர் திணைக்களத்தினால், இந்த வழக்கினை நடத்துவதற்கு, சிரேஸ்ட அரச சட்டவாதி ஒருவரை நியமித்திருப்பதாகவும், இந்த வழக்கின் சாட்சி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக, இவ் வழக்கினை வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கான தவணை வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இன்றையதினத்திற்கு தவணை வழங்கப்பட்டு, இன்று வழக்கு தொடர்பில் நீதிமன்றத்திற்கு அழைத்த போது இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவை என சட்டவாதியால் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் எதிரிகள் தெரிவித்ததாவது,
வழக்கானது கடந்த 4 வருடங்களாக இந்த நீதிமன்றத்திலே தவனை வழங்கப்பட்டு வருகின்றது.
8 வருடங்களும் 3 மாதமும் விளக்கமறியலில் இருந்து வருகின்றோம்.
இந்த வழக்கு இதுவரை காலமும் விளக்கத்திற்கு எடுக்காததன் காரணமாக தாம் மூவரும் கடந்த 20 ஆம் திகதி முதல் சாகும் வரையான உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவருகின்றோம்.
இன்று வரை 4 நாட்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
இந்த வழக்கானது இந்த நீதிமன்றத்திலேயே இடம்பெற வேண்டும்.
இல்லாவிட்டால் நாங்கள் சாகும் வரையான உண்ணாவரத்தில் ஈடுபடுவோம்.
என தெரிவித்தனர்.
இது தொடர்பில் மன்றினால் சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் வினவிய போது,
இந்த எதிரிகள் மூவரும் கடந்த 20 ஆம் திகதி முதல் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்க்பட்டது.
அதனைத்தொடர்ந்து இது தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்ததாவது,
இந்த வழக்கானது கடந்த 4 வருடங்களாக இந்த நீதிமன்றத்திலே நடைபெற்று வருகின்றது.
இந்த எதிரிகள் கிட்டத்தட்ட கடந்த 8 வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.
தற்போது உண்ணாவிரத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த எதிரிகள் இவ்வாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டு அவர்களது உயிருக்கு ஏதும் ஏற்பட்டால் அதுதொடர்பில் நான் பொறுப்புக்கூற வேண்டியவனாக உள்ளேன்.
அத்துடன் பயங்கரவாத தடைக்கட்டளை சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை அன்றாடம் விளக்கத்திற்கு எடுத்து முடிவுறுத்துமாறு பிரதம நீதியரசரினால் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
என குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் இந்த வழக்கினை விசாரணைக்கு நியமிப்பதாகவும், அனைத்து சாட்சிகளுக்கும் அழைப்பு கட்டளை பிறப்பித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கினை செப்ரெம்பர் மாதம் 25, 26, 27 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார்.

Leave a comment