நாட்டிற்கு புதிய நீதி அமைச்சராக பெண் அமைச்சர் ஒருவரே நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில்விக்ரமசிங்க நேற்று ஜனாதிபதியிடம் கோரி இருந்தார்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக விஜயதாசமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அவர் அமைச்சரவைப் பொறுப்புக்களை வகிக்க தகுதியற்றவர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி அவர் வகிக்கும் அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் அவரை நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரி இருந்தார்.
இந்த நிலையிலேயே அஜித் பீ பெரேரா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் குற்றவாளிகளை அடையாளம் கண்டதன் பின்னரும், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிலவிய தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் விஜயதாச தொடர்பான முக்கிய கலந்துரையாடலின் பொருட்டே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

