ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து, பொலித்தீன் பாவனைக்கான தடை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் குறிப்பிட்ட பொலித்தீன் பைகள், உணவு பொதியிடும் பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிபோம் உணவுப் பெட்டிகள் என்பவற்றுக்கு தடைவிதிக்கப்படுகிறது.
எனினும் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான மாற்றுத்தீர்வைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே நேற்றையதினம் இது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னதாக இறுதிமுடிவு எடுக்க பிரதமர் இணங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 2014ஆம் ஆண்டு பேருவளை மற்றும் அழுத்கம பகுதிகளில் இடம்பெற்ற குழப்பநிலையில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கவும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீள்குடியேற்றத்துறை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதற்கான யோசனையை முன்வைத்தநிலையில், அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு பேருவளை மற்றும் அழுத்கம பகுதிகளில் இடம்பெற்ற குழப்பநிலையின் காரணமாக, 3 பேர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர்.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.

